நடன கலைஞரை சுட்டு கொன்ற இருவர்… திருமண விழாவில் ரத்த கலவரம்…

பிகாரில் நடனக் கலைஞரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவர் போலீசில் சிக்கினர். திருமண விழாவை ரத்த கலவரமாகி, ஊர் மக்களுக்கு உயிர் பயம் காட்டிய சம்பவத்தில் நடந்தது என்ன?

பிகார் மாநிலம் கோபால்கஞ்ச் அருகே உள்ள, மஹுவா பட்டன் கிராமத்தைச் சேர்ந்தவர் நடனக் கலைஞர் சோனு. படோவா கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், கச்சேரி ஆட்டத்திற்காகச் சென்றுள்ளார்.  திருமண ஊர்வலத்தில் நடனமாடியவர் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றதும் மேடைக்குப் பின்னால் இருந்த ஒரு கூடாரத்தில் சக நடன கலைஞர்களுடன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த உள்ளூர் நபர்கள் மூன்று பேர்…  சோனுவை தனியாக அழைத்துச் செல்ல முயன்று கையை பிடித்து இழுத்துள்ளனர். ஆனால் கையை தட்டி விட்டு மூவரையும் கடுமையாக எச்சரிக்க, அவர்கள் திடீரென்று ஆத்திரம் அடைந்து துப்பாக்கியை எடுத்து சோனுவை சுட்டுள்ளனர்.

தோட்டா தெறிக்கும் சத்தம் கேட்டு கல்யாண வீடே தலைதெறிக்கக் குற்றவாளிகளும் அங்கிருந்து ஓடினர்.  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சோனுவை, சக நடன கலைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சோனு பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபால்கஞ்ச் மாவட்டம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து கடந்த 2 நாட்களாகக் கொலையாளிகளைத் தேடி வந்தனர். ஆனால் போலீசார் தேடுவது தெரிந்து அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.  இருப்பினும் உள்ளூர் ஆட்களின் உதவியுடன் அடையாளங்களை வைத்தும்,  செல்போன் எண்ணை ட்ராக் செய்தும்,  படோவா கிராமத்தைச் சேர்ந்த சைலேஷ் குமார் மற்றும் சந்த் அலி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.