அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் முகாம் அலுவலகங்களில் உரிய அனுமதியின்றி ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் எடுப்பது மற்றும் அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது சட்டப்படி குற்றமாகும் என அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்குள்ளேயே வடமாநில இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
“திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பொதுப்பணித் துறையின மூலமாக கட்டிடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையின், இப்பணிகளை மேற்கொண்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து வீடியோவாகச் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், மாவட்டத்தின் உயரிய அதிகாரியின் முகாம் அலுவலகப் பகுதிக்குள் எவ்விதக் கண்காணிப்பும் இன்றி, பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ரீல்ஸ் எடுக்கப்பட்டுப் பதிவிடப்பட்ட இச்சம்பவம், அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் நம்பகத்தன்மை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

More Stories
மதுரையில் இளைஞர் ஓடஓட விரட்டி படுகொலை …
அரசுப் பள்ளி ரீல்ஸ் : அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்..
போதை இல்லா தமிழகம் நோக்கி ஓட்டம்… இளைஞர்களுக்கு அழைப்பு…