“முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால், தவெகவில் இணைந்தேன்” 

“பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனும் புதிய சகாப்தத்தை இந்தத் தேர்தல் உருவாக்கியிருக்கிறது. இதற்கான அடிப்படை காரணம், முதலமைச்சர் விஜய்தான்” என தவெகவில் இணைந்த சி. மகேந்திரன் நியூஸ்18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான மகேந்திரன், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்துவந்தவர் மகேந்திரன். இவர் இன்று சிபிஐ கட்சியில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ளார்.

தவெக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் மகேந்திரன் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இணைவு நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன், “ஊழலை ஒழிக்க முடியும் எனும் பெரும் நம்பிக்கையை நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தந்துள்ளார். அதன் காரணமாக நான் தவெகவில் இணைந்துள்ளேன். என்னதான் அரசியல் பேசினாலும், இந்த சமூகம் மேல் தட்டு மக்களுக்கான வசதிகளையே செய்துகொடுக்கிறது. ஆனால், ஒடுக்கப்பட்டவனுக்கு கொண்டு சென்று கொடுக்கும் சாத்தியத்தை இந்தத் தேர்தல் மூலம், நம் தலைவர் விஜயின் மூலம் தொடக்கிவைத்திருக்கிறது. இதனை தமிழ்நாட்டின் வெற்றியாக மட்டுமல்லாமல் இந்தியாவின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

ஒழிக்கவேண்டும் என பேசிவரும் சாதியை இந்தத் தேர்தல் ஒழித்துள்ளது. எனது அரசியல் வாழ்வில் இதனை வியந்து பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை – பணக்காரன் வேறுபாடுகள் என அனைத்தையும் ஒழித்திருக்கிறது. மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோர் எடுத்த எளிய மக்களுக்கான அரசியலை போன்றதை இந்த இயக்கம் (தவெக) எடுத்துள்ளது. அதற்கான விதை போடப்பட்டுவிட்டது” என பேசினார்.