பயங்கர ஆயுதங்களுடன் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட பிரபல ரவுடி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் ஜானி(45), பிரபல ரவுடி. இவர் மீது 6 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், கடத்தல், 20 வழிப்பறி, பணம் கேட்டு மிரட்டல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவர், இன்டர்நெட் போன் மூலம் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.
பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ஜானியை கடந்த 2020ம் ஆண்டு கைது செய்து வேலூர் சிறையிலும், பின்னர் கடலூர் சிறையிலும் போலீசார் அடைத்தனர். தற்போது மீண்டும் ஜாமீனில் உள்ள ரவுடி ஜானி கொலை, கொலை முயற்சி என தன் மீதான வழக்கு விசாரணைகளுக்கு கோர்ட்டில் ஆஜராகி வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு ஜானி தனது பிறந்த நாளை, வேலூர் மக்கான், காட்பாடி, சத்துவாச்சாரி, ஓல்டு டவுன், ேதாட்டப்பாளையம், காகிதப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது கூட்டாளிகளுடன் கொண்டாடியுள்ளார். வண்டறந்தாங்கல் வீதியில் வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கி ஆகியவற்றுடன் கேக் வெட்டியும், ரீல்ஸ் எடுத்தும் கொண்டாடியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த ரீல்ஸ் வெளியாகி காட்பாடி, வேலூர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து நேற்று நள்ளிரவு காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் ரவுடி ஜானியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!