காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்:

நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகனே கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (62). விவசாயியான இவர் சொந்தமாக நிலம் வைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் சிலம்பம், குஸ்தி மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி ஜெயசுந்தரி. இவர்களுக்கு ராஜாராம் என்ற மகனும், ஜான்சி ராணி, திவ்யா என்ற 2 மகளும் உள்ளனர். 2 மகளுக்கும் திருமணமாகி விட்ட நிலையில், மனைவி இறந்துவிட்டதால் மகனுடன் வசித்து வந்தார். சமீபகாலமாக பத்திரக்கோட்டை – புலியூர் செல்லும் சாலையில் உள்ள அவரது நிலத்தில் கூரை கொட்டகை அமைத்து சமைத்து சாப்பிட்டு கொண்டு இரவில் அங்கேயே காவலாளி பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று குணசேகரன் செல்போனுக்கு கீழ்மாம்பட்டில் உள்ள பெரிய மருமகன் தவபாலன், போன் செய்த நிலையில் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தவபாலன், சிறிய மருமகனான கடலூர் வண்டிக்குப்பத்தில் வசிக்கும் தனிஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, விவரத்தை கூறி மாமனாரை உடனடியாக பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். அதன்பேரில் தனிஷ்குமார், அங்கு சென்று பார்த்தபோது மார்பில் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் குணசேகரன் பிணமாக கிடந்தார்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நேரில் வந்து குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கொலை வழக்கு பதிவுசெய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: ஆந்திராவில் நீண்டநாட்களாக வேலை செய்துவிட்டு ஊர் திரும்பிய ராஜாராம், அங்குள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்ய குணசேகரன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அத்தோடு புதிய தொழில் தொடங்க தந்தையிடம் ராஜாராம் பணம் கேட்டபோது, மறுத்துவிட்ட குணசேகரன் விவசாயம் பார்க்க மகனிடம் கூறியுள்ளார். காதல் திருமணத்துக்கும், புதிய தொழிலுக்கும் தொடர்ந்து, முட்டுக்கட்டையாக தந்தை இருந்த நிலையில், நேற்று குணசேகரனை பார்த்து இதுதொடர்பாக பேச நிலத்திலுள்ள கூரை வீட்டிற்கு ராஜாராம் சென்றுள்ளார்.

அப்போது, தந்தை, மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜாராம், அங்கிருந்த கத்தியால் குணசேகரன் மார்பில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தந்தை கீழே சரிந்ததும் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜாராமை (29) இரவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதல் திருமணத்துக்கு தடையாக இருந்த தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது