சிதம்பரம் வடக்கு ரத வீதியில் குமர விலாஸ் என்ற ஹோட்டலை நடத்தி வருபவர்கள் ராஜசுந்தரம் ஜெயந்தி தம்பதி. இவர்கள் இரவு கடையை சாத்தும்போது கடைக்கு சென்ற நபர் ஒருவர் தோசை பார்சல் வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் வீட்டு விசேஷத்திற்கு சாப்பாடு ஆர்டர் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாளை வாருங்கள் நேரம் ஆகிவிட்டது என்று தம்பதி தெரிவித்த நிலையில், ஐந்து நிமிடம் இருங்கள் என கூறி அந்த நபர் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது ராஜசுந்தரம் லைட்டை அனைக்க சென்றபோது இருவர் முகத்திலும் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து அந்த நபர் தூவியிருக்கிறார். கண்களில் மிளகாய்ப்பொடி விழுந்ததும் துடித்துப் போன அவர்கள் அலறியுள்ளனர். அதுதான் சமயம் என நினைத்த அந்த நபர், ஜெயந்தி கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலி செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட ஜெயந்தி கத்தி கூச்சலிட்டு உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அப்பகுதி ஓடி வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அந்த மர்ம நபர் பயந்து போய் தப்பி ஓடியிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து ஓடிய பொதுமக்கள் அம்பலத்தாடி மட தெருவில் அவரை சுத்துப் போட்டு மடக்கியிருக்கின்றனர். அப்போது இடுப்பில் சொருகியிருந்த கத்தியை உருவிய அந்த நபர் அருகில் வந்தால் சொருகி விடுவேன் எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.
பின் என்ன நினைத்தாரோ அவரது கையை அவரே கிழித்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால், பொதுமக்கள் உடனே சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேத்தியாதோப்பு அருகே உள்ள பெரிய குப்பத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது.
கார் தவணை கட்டுவதற்கு பணம் இல்லாததால் திருட முயற்சி செய்ததாகவும், அப்போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்த நகர போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
ஜியோவில் இருந்து ஏர்டெல்லுக்கு மாற்ற அனுமதிக்காததால் பெற்றோரை படுகொலை செய்த பெங்களுரு பொறியாளர்?
ஆபரேஷன் செக்மேட்’| அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது…
கிரிவலம் சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை.. நகை பறிப்பு…