கோடிக்கணக்கில் நிதி வசூலா? RBI விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா ‘VK Promotion’? செய்தி வெளியிட்ட செய்தியாளருக்கு அமைச்சர் பெயரைச் சொல்லித் த.வெ.க பிரமுகர் கொலைமிரட்டல்!

கோடிக்கணக்கில் நிதி வசூலா? RBI விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா ‘VK Promotion’? செய்தி வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அமைச்சர் பெயரைச் சொல்லித் த.வெ.க பிரமுகர் கொலைமிரட்டல்!

கோவை:

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘VK Promotion’ நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டுவதிலும், கிளைகள் (Franchise) ஒதுக்குவதிலும் ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளருக்கு, தமிழக  அமைச்சர் செங்கோட்டையன் பெயரைப் பயன்படுத்திப் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​ரூ. 5 லட்சம் பிரான்சைஸ் கட்டணம்: ஆர்பிஐ விதிகள் பின்பற்றப்படுகிறதா?

​சமூக வலைதளங்கள் மூலமாகத் தங்களை ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக முன்னிறுத்தி வரும் ‘VK Promotion’ நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களது கிளைகளைத் தொடங்கப் பொதுமக்களிடம் இருந்து தலா ரூ. 5 லட்சம் வரை கட்டணமாகப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

​இந்தியாவில் பொதுமக்களிடம் இருந்தோ அல்லது முதலீட்டாளர்களிடம் இருந்தோ நிதி வசூல் செய்யும் எந்தவொரு நிறுவனமும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அல்லது செபி (SEBI) போன்ற மத்திய அரசு அமைப்புகளின் கடுமையான வழிகாட்டுதல்களையும், முறையானப் பதிவுகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும்.

​இது குறித்து ‘VK Promotion’ நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, “உங்களது நிறுவனம் அரசு பதிவு பெற்றதா? ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படிதான் பணம் பெறப்படுகிறதா?” என்று விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அந்த நிறுவனத்தின் மேலாளர் அருண் என்பவர், “எங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கிறது” என்று மழுப்பலாகக் கூறினாரே தவிர, அது சம்பந்தமான எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணத்தையோ, ஆதாரத்தையோ காட்ட முன்வரவில்லை. இதுவே அந்த நிறுவனத்தின் மீதான சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்துள்ளது.

​அமைச்சர் பெயரைச் சொல்லிப் பத்திரிகையாளருக்குக் கொலைமிரட்டல்!

​நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த உண்மை நிலவரத்தைச் செய்தியாக வெளியிட்ட உடனே, ‘VK Promotion’ நிறுவனத்தின் உரிமையாளரும், த.வெ.க பிரமுகருமான வெற்றி என்பவர் பத்திரிகையாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆவேசமாக மிரட்டியுள்ளார்.

​அமைச்சர் செங்கோட்டையன் பெயரைப் பயன்படுத்தி, “அமைச்சர் செங்கோட்டையன் காலை பேசுவார்!” என்று கூறி, செய்தியாளருக்குப் பகிரங்கமாகக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இந்த அதிரடி மிரட்டல் ஆடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.

​அரசியல் கட்சிகளின் மௌனம் ஏன்?

​ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளருக்கு, அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர் கொலைமிரட்டல் விடுத்துள்ள விவகாரம் தமிழக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

​இருப்பினும், இந்த ஆடியோ ஆதாரம் வெளியாகி இரண்டு நாட்களாகியும், சம்பந்தப்பட்ட த.வெ.க பிரமுகர் வெற்றி மீது த.வெ.க தலைமை இதுவரை எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. அதேபோல், தன் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தும்  அமைச்சர் செங்கோட்டையன் தரப்பிலும் “மௌனம்” மட்டுமே விடையாக உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

​அரசுக்கும் உளவுத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை:

​பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் நிதி வசூலிக்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்தும், பத்திரிகையாளருக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டல் குறித்தும் தமிழக அரசும், காவல்துறையின் உளவுத்துறையும் (Intelligence Bureau) உடனடியாகத் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்செய்தியின் தொடர்ச்சி…

“‘VK Promotion’ நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வெற்றி மீது அடுத்தடுத்து எழுந்துள்ள புகார்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள கூடுதல் ஆதாரங்கள் குறித்த விரிவான புலனாய்வுத் தொகுப்பு ஜியோ நியூஸ் தமிழில் அடுத்த பகுதியில் (Part 2) தொடரும்…”