சுவர் ஏறிகுதித்து தப்பிய போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு காயம்.. 50,000 லஞ்சம் வாங்கியபோது சுற்றிவளைப்பு..!

50,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக சுவர் ஏறி குதித்த போது காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா ( Kerala Alapuzha ) மாவட்டத்தில் உள்ள சேர்தலா சரக துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர் அணில் குமார். இவர் சேர்தலா அருகே உள்ள தைக்கால் என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அணில் குமார் மனிதக் கழிவுகளை அகற்றும் செப்டிக் டேங்க் லாரி ஒன்றை பறிமுதல் செய்திருந்தார். மேலும் அந்த வாகனத்தை விடுவிப்பதற்காக காவல்துறை அதிகாரியான அனில் குமார் அதன் உரிமையாளரிடம் இரண்டு லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரியான அணில் குமாரால் ஏற்கனவே படாதபாடுகளை அனுபவித்த அந்த லாரி உரிமையாளர் இதனால் கடுப்பாகியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத அந்த செப்டிக் டேங்க் லாரியின் உரிமையாளர் போலீஸ் அதிகாரியான அணில் குமாருக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவெடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியமாக அணில் குமார் குறித்து புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அணில் குமாரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளரிடம் முதல் தவணையாக ரசாயனம் தடவிய 50,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து அணில் குமாரின் வீட்டிற்கு சென்று கொடுக்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி லாரி உரிமையாளர் அணில் குமாரின் வீட்டிற்கு சென்று லஞ்சமாக கேட்ட 50,000 ரூபாயை கொடுத்த போது, அங்கு வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பென்னி தலைமையிலான போலீசார் அதிரடியாக அவரது வீட்டிற்கு நுழைந்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல் அதிகாரியான அணில்குமார் அதிர்ச்சியடைந்து மாடிக்கு ஓடிச்சென்று பின்னர் அங்கிருந்து வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்தார்.

மடக்கிப்பிடித்து கைதுஎனினும் அணில் குமாரை விரட்டிச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பென்னி, காவல் ஆய்வாளர்களான சைஜூ இப்ராஹிம் மற்றும் பிரசாந்த் குமார் ஆகியோர் அனில் குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

சுவர் ஏறி குதித்ததால் அனில் குமாருக்கு காயம் ஏற்பட்டது . பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது..

இதன் பின்னர் அணில் குமாரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி செப்டிக் டேங்க் லாரி உரிமையாளரிடம் தொடர்ந்து மிரட்டிய அணில் குமார் ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாயை லஞ்சமாக வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் இந்த 15,000 ரூபாயய் போதாது எனவும் இனி ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் எனவும், ஒரு லட்ச ரூபாய் கூடுதலாக தர வேண்டும் எனவும் அணில் குமார் லாரி உரிமையாளரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு லாரி உரிமையாளர் மறுக்கவே செப்டிக் டேங்க் லாரியை அணில் குமார் பறிமுதல் செய்ததும் தெரிய வந்தது.

மேலும் இவர் இதற்கு முன்னதாக பணியாற்றிய இடத்திலும் அணில் குமார் மீது பல்வேறு லஞ்சப் புகார்கள் இருப்பதாக தெரியவந்தது.

பின்னர் அணில் குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் லஞ்சம் வாங்கிய வழக்கில் போலீசாரால் விரட்டி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளா காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலத்தில் அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா அண்மையில் லஞ்சம் வாங்குவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளை அறிவுறுத்தினார். லஞ்சம் வாங்குபவர்களை அதிரடியாக கைது செய்வதற்காக ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ என்ற திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி முதலில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி அனில்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.