திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தொழிலாளி ஒருவர் எதிர்பாராத விதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்து, இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நிலையில், தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்ற தொழிலாளி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் இனாம்காரியந்தல் – கோடிகுப்பம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். கிணற்றில் அதிக அளவில் தண்ணீர் இருந்ததாலும், அவருக்கு நீச்சல் தெரியாததாலும் தண்ணீரில் தத்தளித்துள்ளார். எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கில், கிணற்றிலிருந்த மோட்டாரின் பிளாஸ்டிக் பைப்பை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள்ளேயே நின்றுள்ளார்.
அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அவர் எழுப்பிய உதவிக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. இதன் காரணமாக, அவர் விடிய விடிய கிணற்றுக்குள்ளேயே மரண பயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார்.
மறுநாள் காலை, கிணற்றின் உரிமையாளரின் மகன் மோட்டாரை இயக்குவதற்காக அங்கு வந்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் இருந்து பலவீனமான சத்தம் கேட்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கு அருண்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, கிணற்றுக்குள் இறங்கி அருண்குமாரை பத்திரமாக மீட்டெடுத்தனர்.
தொடர்ந்து, அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், கிணற்றுக்குள் விழுந்து ஒரு தொழிலாளி இரவு முழுவதும் உயிருக்கு போராடி மீட்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கடன் தொல்லையால் விபரீதம்.. மனைவி, மகள் கொலை.. திமுக பிரமுகர் தற்கொலை..
குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீருடன் வந்த 10 அடி சாரைப்பாம்பு…
கோவை: கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் தகனம்…