அம்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை சரமாரி தாக்கி கைகளை துணியால் கட்டி கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து ஆட்டோவில் தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சொத்துக்காக கொலை நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அம்பத்தூர் சூரப்பட்டு துலுக்கானத்தம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர்.
6 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக கணவர்களுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு பொன்னம்மாள் வீட்டிற்கு ஆட்டோவில் வந்த 2 பேர், திடீரென வீட்டுக்குள் புகுந்து, சிறிது நேரம் கழித்து அதே ஆட்டோவில் வேகமாக திரும்பியுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பொன்னம்மாள் முகம், கண்களில் காயத்துடன் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் சுயநினைவின்றி மயக்கநிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சில் வந்த செவிலியர் பரிசோதித்து பார்த்தபோது மூதாட்டி இறந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி வீட்டிற்கு அடை யாளம் தெரியாத 2 பேர் வந்ததாகவும், சிறிது நேரம் கழித்து அவர்கள் அதே ஆட்டோவில் கிளம்பி சென்ற நிலையில் மூதாட்டி வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும், அவர் அணிந்திருந்த நகைகள் இல்லாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
மேலும் சூரப்பட்டு பேருந்து நிலையம் அருகே மூதாட்டிக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள நிலம் இருப்பதாகவும், சமீபத்தில் அந்த இடத்தை விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணம் பெற்று 6 மகள்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதமுள்ள ஒரு லட்ச ரூபாயை வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சொத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டும், பீரோ உடைக்கப்பட்டும் இருந்ததால் கொலையில் உறவினர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
10ஆம் வகுப்புமாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பள்ளி மாணவர்கள்..
ஆடுகளை திருடி காதலிக்கு விலை உயர்ந்த பரிசு: வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்:
தமிழகத்தில் வாக்களித்த ‘வெளிநாட்டு குடியுரிமை’ கொண்டவர்கள் கைது …