மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி ராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய விபி ஜிராம் ஜி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வரும் என்றும், இது தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் (MGNREGA) விதிமுறைகளை படிப்படியாக மாற்றியமைக்கும் என்றும் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலமும், கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், கிராமப்புறத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்த திட்டம் ஒரு புதிய விடியலை கொண்டுவரும் என்று மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த சவுகான், “இந்த புதிய திட்டமானது கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் அளிக்கும். இச்சட்டம் முழுமையாக அமலாகும் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் அனைத்து தற்போதைய விதிகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். புதிய சட்டம் அமலாகும் வரையிலான காலத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.
இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி செய்யப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் கீழ் செயல்பாட்டுத் தயார் நிலையை நிறைவு செய்ய மாநிலங்களுக்கு ஆறு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
சில மாநிலங்கள் தங்கள் ஏற்பாடுகளை இன்னும் நிறைவு செய்யாதிருந்தாலும் கூட, ஜூலை 1 முதல் கிராமப்புற வேலைவாய்ப்புப் பணிகளுக்கான நிதி விபி ஜி ராம் ஜி சட்டத்தின் மூலமாகவே வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் இத்திட்டதுக்காக மத்திய அரசு ரூ.95,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. அதேவேளையில் மாநிலங்களும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கீடுகளைச் செய்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஏற்படும் மொத்த ஆண்டுச் செலவு ரூ.1.51 லட்சம் கோடிகளை தாண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

More Stories
இளைஞரை கொடூரமாக கொலை செய்து அதை வீடியோ எடுத்த சிறுவர்கள்…
கீழக்கரை அருகே ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலம்…
“தமிழக அரசியல் பண்பாட்டை மீட்கும் முதல்வர் ஜோசப் விஜய்…” – மு.வீரபாண்டியன் பாராட்டு