September 10, 2026

விஜய் முதல்வராவதில் இழுபறி.. ”ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்டுகள்”… கபில் சிபல்!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை சந்தித்தது. புதிய வரவான தவெக முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பெற்று 108 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் என்ற நிலையில் 5 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் தனது ஆதரவினை நேற்று தெரிவித்தது. அதனையடுத்து தவெக ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 113ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுவதால் விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கேட்டுவருகிறது. இந்நிலையில் நேற்று (மே.6) நேரில் சென்று ஆளுநரை விஜய் சந்தித்து பதவியேற்க உரிமைகோரிய போதும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இன்றும் விஜய் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்த நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் பெயர் பட்டியலை கொடுத்த பிறகே ஆட்சி அமைக்க அழைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது குறித்து பல கட்சிகளும், தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்ய சபா எம்பியும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகப் படுகொலை என்றும் ஆளுநர்கள் பாஜகவின் நலனுக்காக அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக (108 இடங்கள்) வந்துள்ள விஜய்யை ஆளுநர் உடனடியாக அழைத்து, முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் தீர்மானிக்கக் கூடாது; சட்டமன்றத்தின் தளத்தில் நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கூட்டணிகளை விட, தனிப்பெரும் கட்சிக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது சர்க்காரியா கமிஷன் வழங்கிய தீர்க்கப்பட்ட சட்டமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may have missed