May 4, 2026

 மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ வாலிபர் கைது:

கொடைக்கானல் மலைப்பகுதியில், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்துக்கொன்ற சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியை அடுத்துள்ளது ஆனைகிரி சோலை குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் வசிப்பவர் சிதம்பரம். இவரது மனைவி தனபாக்கியம் (74), ஏப். 30ம் தேதி காய்கறி வாங்குவதற்காக சென்றார். பின்னர் வீடு திரும்பாத அவரை, உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஆனைகிரி சோலை பகுதியில் மூதாட்டி தனபாக்கியம், ஆடைகளின்றி ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் இருந்த பெரியகருப்பனை (27) நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, மூதாட்டியின் செல்போனும் பறிமுதலானது. போலீசார் கூறுகையில், ‘‘ஆண்டிபட்டியை சேர்ந்த பெரியகருப்பன், கொடைக்கானல் மேல்மலையின் புதுப்புத்தூர் கிராமத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார்.

ஏப். 30ம் தேதி போதையில், மூதாட்டியை ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்குள் இழுத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே ஒரு மூதாட்டியை பலாத்காரம் செய்த வழக்கு, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவர் வசிக்கும் புதுப்புத்தூர் கிராமத்திலும், ஒரு மூதாட்டியிடம் அத்துமீறியுள்ளதாக கூறுப்படுகிறது. ஒரு சைக்கோ போல் மூதாட்டிகளை தேடிச்சென்று பலாத்காரம் செய்வதை, இவர் வழக்கமாக வைத்துள்ளதாக தெரிகிறது’’ என்றனர்.