தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் மதியம் 12 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 108, திமுக 62, அதிமுக 64 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் 15 தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், அமைச்சர்கள் சேகர்பாபுவின் துறைமுகம், மா.சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார். கொளத்தூர் மூன்றாவது சுற்று முடிவில், அந்த தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் 10639 வாக்குகளும், த.வெ.க 12916 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதன்படி 2,277 வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க முன்னிலை வகிக்கிறது.
அதேநேரம், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். வில்லிவாக்கத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார். போடி தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு, தவெக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னடைவில் உள்ளார். எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் ராஜ்மோகனும், திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜும் முன்னிலையில் உள்ளனர்.
30 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த பாளையங்கோட்டை தொகுதியில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் தவெகவின் பிரபு முதலிடத்தில் உள்ளார். சீமான் இங்கு 3வது இடத்தில் உள்ளார். இதற்கிடையே, நடிகர் விஜய்யின் இல்லத்திற்கு நடிகை த்ரிஷா வந்திருக்கிறார். வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் நடிகை த்ரிஷா நீலாங்கரை இல்லத்திற்கு வந்திருக்கிறார். அங்கே வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார். இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்த த்ரிஷா, தரிசனம் முடித்த பின் சென்னை திரும்பிய நிலையில் தற்போது விஜய்யின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

More Stories
விமானத்தின் அவசரகால கதவை திறந்து பயணி குதித்து ஓடியதால் பரபரப்பு…
மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ வாலிபர் கைது:
காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்: தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…