திருச்சி அருகே சிறுமியை 2வது திருமணம் செய்த வழக்கில் தவெக நிர்வாகி நேற்று போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). அந்தநல்லூர் தவெக ஒன்றிய இணைச்செயலாளர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கார்த்திக் 17வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், சிறுமியின் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் கடந்த 2023ம் ஆண்டு போலீசார் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், 17வயது சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு தெரியாமல் கார்த்திக் திடீரென திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சிறுமியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கும், கார்த்திக் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சிறுமியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெகவினர் பேசி வரும் நிலையில், சிறுமியை 2வது திருமணம் செய்த வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் இடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
சாட்சியத்தை மட்டும் வைத்து மரண தண்டனை வழங்க முடியாது: போக்சோ வழக்கில் கைதானவரை விடுதலை செய்து மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளிப்போவது ஏன்? நீதிமன்ற வழக்குகள் குறித்து வெளியான தகவல்
மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து சமூக குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு, கறிக்குழம்பு வழங்கி நெகிழ்ச்சி!