September 10, 2026

மதுரை: திரளி பெரிய கண்மாய் விவகாரம் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திரளி பெரிய கண்மாயில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதாக கூறப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த பத்திரிகையாளர் உதயசிங் தாக்கல் செய்துள்ளார்.

கனிமவள கொள்ளையா..?

மனுவில், திருமங்கலம்–வடுகபட்டி நான்கு வழிச்சாலை பணிக்காக, தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சுமார் 10,000 கன மீட்டர் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாகவும், அந்த அனுமதியில் ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நடைமுறையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் கண்மாயின் கட்டமைப்பு மற்றும் சுற்றுப்புற நீர்வள அமைப்புகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய ஆய்வு இல்லை

மேலும், இதுகுறித்து ஜனவரி மாதத்திலேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வில்லை என்றும், பின்னர் மண் அகழ்வு மற்றும் கடத்தல் நடைபெறுவதாக வீடியோ ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்த வழக்கு  நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கண்மாயில் நடைபெறும் மண் அள்ளுதல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், கனிமவளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 2ம்தேதி ஒத்திவைத்தனர்.

You may have missed