September 10, 2026

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ.5 ஆயிரம்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

எடப்பாடியில் எம்எல்ஏ திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” திமுக அரசை அகற்ற விருப்பம் உள்ளவர்கள் எங்களோடு இணைந்து கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.ஆனால், செய்தார்களா?

இன்று மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தை 125 நாட்களாக உயத்தியிருக்கிறது. அதனை பாராட்ட திமுகவிற்கு மனமில்லை. கல்விக்கடன் தள்ளுபடி என்ன ஆனது? கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது. செவிலியர்களை பணிநிரந்தம் செய்யாமல் திமுக அரசு திட்டமிட்டே ஏமாற்றுகிறது. எஸ்ஐஆர் நடைமுறைக்குப் பின் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்பட்டதாக தவறான தகவல் கூறுகின்றனர்.

போலி வாக்காளர்கள், இரட்டை வாக்காளர்களைத் தான் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள், போலி வாக்காளர்களை வைத்து திமுக இவ்வளவுநாட்களாக வெற்றி பெற்று வந்தது. தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.

தவெகவை நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பாஜகவின் நிலைப்பாடு.கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெக தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தவெக தூய சக்தி என்று அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார்.இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து திமுகவுக்கு வாக்களித்தனர். அதிமு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

You may have missed