சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பிஹாரில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.

பிஹாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கடந்த, நவம்பர் 6-ம் தேதி 121 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 122 சட்டமன்ற தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் பாஜக மற்றும் ஜனதா தளம் இணைந்து பிஹாரில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதில் பாஜக மட்டும் 85-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 9 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.