September 10, 2026

பாடகர்களுடன் பாட்டு பாடி அசத்திய முதல்வர் ஸ்டாலின் : Vibe_With_MKS

‘வைப் வித் எம்கேஎஸ்’ (Vibe With MKS) என்னும் நிகழ்ச்சியில், சினிமா பாடகர்களுடன் பாட்டு பாடி முதல்வர் ஸ்டாலின் அசத்தியுள்ளார்.

​தமிழக முதல்வர் ஸ்டாலின், இளைஞர்களுடனான தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ‘வைப் வித் எம்கேஎஸ்’ (Vibe With MKS) என்ற புதிய உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

முதலில் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதன் 2வது நிகழ்ச்சியில், அவர் முன்னணித் திரை இசைக்கலைஞர்களுடன் கலந்துரையாடியதோடு, அவர்களுடன் இணைந்து பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

​நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள், பாடலாசிரியர்கள்

​இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தச் சந்திப்பில் பின்வரும் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

  • மதன் கார்க்கி (பாடலாசிரியர்)
  • ​அந்தோணி தாஸ் (பாடகர்)
  • ​கானா முத்து (பாடகர்)
  • ​பிரியங்கா (பாடகி)
  • ​தென்மா (இசையமைப்பாளர்)

​முதல்வர் பாடிய அந்தப் பாடல்?

கலந்துரையாடலின் போது, தனக்குப் பிடித்த பாடல்கள் குறித்துப் பேசிய முதல்வர், தான் எப்போதுமே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாடல்களை விரும்பிப் கேட்பதாகக் கூறினார். குறிப்பாக ‘மன்னாதி மன்னன்‘ படத்தில் வரும் “அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிட உடைமையடா” என்ற பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, பாடகர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா பாடிய காலத்தால் அழியாத பாடலான: ​”நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை… உன் நினைவில்லாத இதயத்திலே ஜீவன் இல்லை...” என்ற பாடலின் வரிகளைப் பாடகர்களுடன் இணைந்து முதல்வர் ஸ்டாலின் பாடினார்.

​கலைஞர்களுக்கு ஊக்கம்:

நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் கானா பாடகர்களின் திறமையை முதல்வர் வெகுவாகப் பாராட்டினார். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் உரையாடினார்.

You may have missed