மதுரை மாவட்டம் திரளி கண்மாயில் நடைபெற்று வரும் சட்டவிரோத மண் சுரண்டல் விவகாரத்தில், கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
நேரில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஆதாரங்களை அழிக்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக எழுந்துள்ள புகார் மதுரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு செய்ய வந்தாரா..?
ஆலோசனை வழங்க வந்தாரா?
நேற்று (10/03/2026) திரளி கண்மாய்க்கு ஆய்வு செய்ய வந்த அதிகாரி ஒருவர், அங்கு விதிமீறலில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்திடம் மிகவும் மென்மையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் பேசிய அந்த அதிகாரி, “இந்தக் கண்மாய் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நாளை பெரிய பிரச்சனை வந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, தோண்டப்பட்ட ராட்சதப் பள்ளங்களை உடனே மூடிவிடுங்கள்” என்று தனியார் நிறுவனத்திற்கு ‘ஐடியா‘ கொடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
சட்டப்படி இது கடமை தவறிய செயலா?
ஒரு நீர்நிலையில் விதிமீறல் நடந்திருப்பது தெரியவந்தால், அதைச் சட்டப்படி ஆவணப்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அபராதம் விதிப்பதும், அனுமதியை ரத்து செய்வதுமே ஒரு அரசு அதிகாரியின் கடமையாகும். ஆனால், ஆதாரங்களை மறைக்க அதிகாரியே வழிமுறை சொல்லிக் கொடுப்பது தமிழ்நாடு கனிமவளச் சட்டம் மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி கடும் குற்றமாகும்்என சமூக ஆர்வலர் கூறினர்.

புகைப்பட மோசடி : கிராம மக்கள் குற்றச்சாட்டு
ஆய்வின்போது அதிகாரிகள் செய்த மற்றொரு தந்திரத்தையும் கிராம மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். கண்மாயில் 15 அடி ஆழத்திற்குப் பள்ளங்கள் உள்ள பகுதிகளைப் புகைப்படம் எடுக்காமல், பள்ளம் இல்லாத சமமான பகுதிகளை மட்டும் புகைப்படம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்ததாரருடன் கைகோர்த்துக்கொண்டு, தவறான கள ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்குச் சமர்ப்பிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் எழுப்பும் கேள்விகள்
யார் அந்த அதிகாரி?: விதிமீறல் பள்ளங்களை மூடச் சொல்லி தனியார் நிறுவனத்திற்குப் பாதுகாப்பாக நின்ற அந்த அதிகாரி யார்?
ஆதாரங்களை அழிப்பதா ஆய்வு?: 15 அடி ஆழப் பள்ளங்கள் GPS புகைப்படங்களில் பதிவாகியுள்ள நிலையில், அதை மூடிவிட்டால் முறைகேடு மறைந்துவிடுமா?
சட்ட நடவடிக்கை எங்கே?: புகார் நிலுவையில் உள்ள நிலையில், ஒப்பந்ததாரருக்குத் துணை போகும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா?
மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு…
மதுரை மாவட்ட ஆட்சியர் பி. பிரவீன்குமார், கீழ்நிலை அதிகாரிகள் ஒப்பந்ததாரருடன் செய்துகொண்டுள்ள இந்த ‘ஒப்பந்தத்தை’ உடைக்க வேண்டும். முறைகேடு நடந்த இடத்தைப் புகார்தாரர்கள் முன்னிலையில் மீண்டும் நியாயமான முறையில் ஆய்வு நடத்தி, ஆதாரங்களை அழிக்கத் துடிக்கும் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திரளி மக்களின் கோரிக்கையாக உள்ளது.






