September 10, 2026

சேகர்பாபு – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு ஏன்? வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன..?

தமிழக  சட்டமன்ற வளாகத்தில் வைத்து ஓ.பன்னீர் செல்வத்துடன் திமுக அமைச்சர் சேகர்பாபு நேரில் சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர், கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான இன்று அதிமுக உறுப்பினர்கள் யாரும் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

சேகர்பாபு – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு ஏன்?

அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். சட்டமன்றக் கூட்டம் நிறைவடைந்ததும் சபாநாயகர் அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்ற நேரத்தில், அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்து பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் – திமுக அமைச்சர் சேகர்பாபு இடையேயான சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின்போது, திமுக இணைய ஓ.பன்னீர்செல்வத்தை சேகர்பாபு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் முன்வைத்து கோரிக்கைகள்..!

அப்போது, தனக்கும், தன்னுடைய ஆதரவு எம்எல்ஏ-வுமான அய்யப்பனுக்கும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும் என்றும், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்ய சபா சீட் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

திமுக தரப்பில் ஓபிஎஸ்-ன் கோரிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்த பிறகு ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் இருக்கும் ஆதரவாளர்களும் “திமுகவில் இணைவார்கள்” என்று அரசியல் வட்டாரத்தில்  பேசப்படுகிறது.

ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ-களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

You may have missed