September 10, 2026

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

மாணவர்களின் வளர்ச்சி திட்டங்கள்

தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு “தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள்” போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

2 கட்டங்களாக விநியோகம்

அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் இன்று மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இவ்விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படைத்த மாணவர்கள், முக்கிய பெருமக்கள், அமைச்சர்கள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் முதலியோர் பங்கு பெறுகிறார்கள்.

You may have missed