September 10, 2026

கரூர் வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது எப்படி?: உச்சநீதிமன்றம் கேள்வி

பிரச்சாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி  தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது  கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த மூன்று நாட்களாக இந்த குழு கரூரில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, என்வி அஞ்சாரியா பெஞ்ச் இன்று விசாரித்தது. அப்போது இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அரசு தரப்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, கரூர் பிரச்சாரம், ரோடு ஷோ நெறிமுறைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்காக மாறியது? பிரசாரம் தொடர்பான ஒரு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எப்படி? கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவை ஒரே நாளில் இருவேறு உத்தரவுகளை பிறப்பித்தது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்தது கரூர் வழக்கை விசாரித்தது எப்படி? சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும் எடுத்து விசாரித்தது ஏன்? ஒரே வழக்கில் ஒரே நாளில் நீதிமன்றங்கள் இருவேறான உத்தரவுகளை பிறப்பிப்பது என்ன மாதிரியான நடைமுறை? தேர்தல் ரோடு ஷோ வழக்கில் விஜய் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துகளை முன்வைத்தது ஏன் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

You may have missed