September 10, 2026

ஆணவக்கொலையை தடுக்க கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென் பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆவணக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், முதலமைச்சர் மு.கஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், ‘ ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் சட்டவல்லுநர்கள் கொண்ட ஆணையம் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்படும். காலனி என்ற சொல் நீக்கம் குறித்து அறிவித்தேன், இது சாதாரண சாதனை அல்ல. பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி பெயரே கூடாது என சமூக நீதி விடுதிகளாக பெயர் மாற்றியுள்ளோம். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

ஆதிக்க எதிர்ப்பும், சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும், அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது. உலகம் அறிவு மயமாகிறது, ஆனால் அன்பு மயமாவது தடுக்கப்படுகிறது” என்று கூறினார்.

You may have missed