April 20, 2026

ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து பேசுங்கள்- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

ஆம்னி பஸ் உரிமையாளர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழக ஆம்னி பஸ்கள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பஸ்களை இயக்காமல் போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.