September 10, 2026

அடேயப்பா…தேர்தல் நன்கொடையாக ரூ.3,112 கோடி பெற்ற பாஜக!

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் 3,112 கோடி ரூபாய் பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்கள், தனிநபர்கள் ரகசியமான நன்கொடை வழங்கி வந்தனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. அத்துடன் தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனால் தேர்தல் பத்திரங்களுக்கு பதிலாக தேர்தல் அறக்கட்டளை மூலம் அரசியல் கட்சிகள் தற்போது நன்கொடை பெற்று வருகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 2024 – 25-ம் நிதியாண்டில், 9 தேர்தல் அறக்கட்டளைகள் மட்டும் மொத்தம், 3,811 கோடி ரூபாயை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தன.

இதில், 82 சதவீதம், அதாவது, 3,112 கோடி ரூபாய் பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு, 8 சதவீதம், அதாவது 299 கோடி ரூபாய், இதர அரசியல் கட்சிகளுக்கு மீதமுள்ள 10 சதவீதம், அதாவது, 400 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

2024 – 25-ம் நிதியாண்டில் ‘புருடென்ட்’ என்ற தேர்தல் அறக்கட்டளை மட்டும் பாஜகவுக்கு, 2,180 கோடி ரூபாயை நன்கொடை வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு, பார்தி ஏர்டெல், ஜிண்டால் ஸ்டீல், மேகா இன்ஜினியரிங், டொரண்ட் பார்மா போன்ற முன்னணி நிறுவனங்கள் நன்கொடை வழங்கியுள்ளன.

டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படும், புரோகிரசிவ் தேர்தல் அறக்கட்டளை வசூலித்த 917 கோடி ரூபாயில், 80.82 சதவீதத்தை, அதாவது 739 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியுள்ளது. நியூ டெமாக்ரடிக் என்ற தேர்தல் அறக்கட்டளை, மஹிந்திரா குழும நிறுவனங்களிடமிருந்து பெற்ற 160 கோடி ரூபாயில், 150 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியுள்ளது.

You may have missed