September 10, 2026

அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்…. தவெக தலைவர் விஜய்!

இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949 நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.

இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மை காத்துள்ளது.

பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

You may have missed