September 10, 2026

ஒரே நாளில் 13 வீடுகளில் கொள்ளை: 3 கொள்ளையர்களை சுட்டுபிடித்த போலீஸ்!

கோவையில் அரசு ஊழியர் குடியிருப்பில் புகுந்து 13 வீடுகளில் கொள்ளையடித்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 3 கொள்ளையர்களை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 14 மாடி கட்டடத்தில் 1800 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு நேற்று (நவம்பர் 28) பூட்டியிருந்த 13 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இதில் மொத்தம் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.  அத்துடன் கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்த கொள்ளையை  நடத்திய கும்பல், கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் பதுங்கியிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் சென்ற போது, அங்கு பதுங்கியிருந்த மூன்று பேரை போலீஸார் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் மூன்று பேரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷிக் (45), இர்ஃபான்(48), கலில் (60) என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் தாக்கியதில் பார்த்திபன் என்ற தலைமை காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்களிடம் கோவை மாநகர காவல்துறை ஆணையர் தேவநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed