September 10, 2026

புதிய பதவிகள்…விஜய் முன்னிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, தலைமைக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்தார். நேற்று விஜய்யை நேரில் சந்தித்தும் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 27) பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வருகை தந்தார். அவரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதன் பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்த செங்கோட்டையன் கட்சியில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை நடிகர் விஜய் வழங்கினார். செங்கோட்டையன் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் எம்.பி சத்யபாமா உட்பட 50-க்கும் மேற்பட்டோரும் தவெகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், செங்கோட்டையனுக்கு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 50 ஆண்டுகளாக அதிமுகவில் பயணம் செய்த செங்கோட்டையன், விஜய் தலைமையில் புதிய பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed