September 10, 2026

பஸ் மீது மோதி இழுத்துச் செல்லப்பட்ட கார்: மாமியார், மருமகள் உள்பட 3 பேர் பலி

திருவண்ணாமலை அருகே தாறுமாறாக தறிகெட்டு ஓடிய கார், அரசு பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாய் பவுனு அம்மாள் (70) என்பவரை விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்து சென்றார். அந்த காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி(36), சக்திவேலின் சகோதரர் கோவிந்தராஜ்(42), அவரது மாமனார் கலைவாணன்(60) ஆகியோர் சென்றனர் அந்த கார், திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. அத்துடன் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது.

இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிய கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் படுகாயங்களுடன் இருந்த கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய மூன்று பேரையு மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணன், பவுனு அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிந்தராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed