September 10, 2026

நடிகர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகருக்கு பாஜகவில் மாநில பதவி!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன் என கொலை மிரட்டல் விடுத்த சீரியல் நடிகருக்கு பாஜகவில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் மூலம் பிரபலமானவர் நடிகர் டி.ரவிச்சந்திரன். இவர் சன்டிவியில் மருமகள், ஜி தமிழில் இதயம் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். அத்துடன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். யூடியூப் சேனல்களுக்கு பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துகளை இவர் வெளியிட்டு வந்தார். நடிகர் சூர்யா உள்ளிட்ட பலரை விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசனின் 20-ம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் அந்த விழாவில், “2017- ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த நீட் சட்டம். அப்படியொரு சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான் அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. இது சர்வாதிகார சங்கிலிகளை, சனாதன சங்கிலிகளை எல்லாம் நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் இதுதான். இதை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும்” என்று பேசினார்.

இதற்கு சீரியல் நடிகரான ரவிச்சந்திரன் கடுமையாக எதிர்வினை புரிந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டிகளில், “கமல்ஹாசனின் சங்கை அறுப்பேன்” என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிவந்தார். அவரின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில், நடிகர் ரவிச்சந்திரனுக்கு பாஜகவில் மாநில பிரச்சார அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” நடிகனாக கமல் சார் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். ஆனால், இந்துக்களின் நம்பிக்கையான விஷயமான சனாதானம் குறித்து விமர்சனம் செய்தால் எப்படி ஏத்துக்க முடியும்? எனவே, எதிர்ப்பை பதிவு செய்தேன். அதை மீடியாவில் பெரிதாக்கிட்டாங்க. கமலை விமர்சித்தற்காக எனக்கு பாஜகவில் இந்த பதவி தரப்படவில்லை.. அதுக்கும் பிரச்சார அணி பொறுப்பு கிடைச்சதுக்கும் தொடர்பில்லை. கட்சிக்காக நான் பேசிட்டு வர்றதை கவனித்துவிட்டு, அவர்களாகவே தந்திருக்காங்க. இனி கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களை மட்டுமே பேசவேண்டும்” என்று கூறியுள்ளார்.

You may have missed