தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவாளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (டிசம்பர் 30) ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான, அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும், சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
