விடுதலைப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குறித்த பதிவு தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்  இந்திய யாதவ மகாசபை எச்சரிக்கை!

நெல்லை: விடுதலைப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோன் குறித்த சமூக வலைதளப் பதிவு தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று யாதவ மகாசபை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு யாதவ மகாசபை இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் எல்.டி.தாஸ் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் முதல் விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்தவர் மாவீரர் அழகுமுத்துக்கோன். அவரது குருபூஜையையொட்டி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தயார் செய்யப்பட்ட ஒரு பதிவை அமைச்சர் நிர்மல்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தவறான கருத்துகள் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டிய பின்பு, அவர் அந்த வார்த்தைகளை மட்டும் நீக்கியுள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறுகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு பதிவிட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு ஏதேனும் தவறுகள் நிகழும்பட்சத்தில், அதற்குப் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தனது பதிவிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த யாதவ அமைப்புகளை ஒன்றிணைத்து, பாளையங்கோட்டையில் வரும் 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்.

மேலும், அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் விஜய் பங்கேற்று மரியாதை செலுத்தவில்லை. இதேநிலை நீடித்தால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக யாதவ சமூக மக்களை அணிதிரட்ட நேரிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது நெல்லை யாதவர் அறக்கட்டளை வழக்கறிஞர் செந்தில்குமரன், யாதவர் பேரவை சண்முகவேல், மாநகர திமுக வர்த்தக அணி கார்த்திக் தம்பான் மற்றும் பாஜக நிர்வாகி முத்துப்பட்டன் ஆகியோர் உடனிருந்தனர்.