தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பால்கனி தடுப்புச் சுவர் இடிந்து, மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை எஸ்.எம்.நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் குப்பன். இவர் தனது மனைவி லட்சுமி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். குப்பன், லட்சுமி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். 40 ஆண்டு பழமை வாய்ந்த இந்த குடியிருப்பின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவது தளத்தின் பால்கனி சுவர் கட்டும் பணி நடைபெற்றுள்ளது.
சுவர் கட்டிய நபர்கள் தடுப்பு வேலிகள் எதுவும் அமைக்காமல் சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று துணிகளை காய வைக்க வந்த லட்சுமி, பால்கனி அருகே சென்ற போது தடுப்புச் சுவரில் இரண்டு செங்கல் விழுந்துள்ளது.
இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து, லட்சுமி மூன்றாவது தளத்திலிருந்து விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் லட்சுமி தவறி விழுந்த நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கட்டுமானப் பணிகள் குறித்து குடியிருப்பவர்களிடம் தகவல் தெரிவிக்க வில்லை, பாதுகாப்புக்காக தடுப்புகள் எதுவும் வைக்கவில்லை என்றும் தரமற்ற முறையில் கட்டுமானம் நடந்துள்ளதாக லட்சுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
ராமநாதபுரம்: தெர்மாகோலை மிஞ்சிய தவெக அரசின் செங்கல் சாலை!
தவெக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம்: நயினார் நாகேந்திரன் சாடல்…
திருமலை: மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை வெட்டிக் கொன்ற சைக்கோ….