மது குடித்துவிட்டு தகராறு: கணவரை கட்டிலில் கட்டிபோட்டு மின்சாரம் பாய்ச்சிய மனைவி…

உத்தரப் பிரதேசத்தில் குடிபோதை தகராறு காரணமாகக் கணவனைக் கட்டிலில் கட்டிவைத்து, மின்சாரம் பாய்ச்சி கொடூரமாகத் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் திவாரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே மது அருந்துவது தொடர்பாக அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதை அடுத்து, சஞ்சீவ் திவாரியை அவரது மனைவி கட்டிலில் கட்டிப்போட்டு இரவு முழுவதும் சிறைவைத்துள்ளார். மேலும், அவரை கொடூரமாகத் தாக்கியதுடன், மின்சாரக் கம்பிகளை உடம்பில் தொட்டு மின் அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சஞ்சீவ் திவாரி, பதேபூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து பதேபூர் எஸ்பி அபிமன்யு மங்லிக் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சஞ்சீவ் திவாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கணவரைக் கட்டிப்போட்டு கொடூரத் தாக்குதல் நடத்திய அவரது மனைவியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.