“இரட்டை மரண தண்டனை” என்பது சட்ட ரீதியாக ஒரு நபர் செய்த குற்றங்களின் தீவிரத்தைக் குறிக்கும் ஒரு முக்கியமான தீர்ப்பாகும். பொதுவாக, ஒருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொலை செய்தாலோ அல்லது மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டாலோ நீதிமன்றங்கள் இத்தகைய தீர்ப்பை வழங்குகின்றன.
இரட்டை மரணத் தண்டனை என்றால் என்ன..?
சட்டப்படி ஒருவருக்கு ஒரு முறைதான் மரண தண்டனையை நிறைவேற்ற முடியும். இருப்பினும், “இரட்டை மரண தண்டனை” என்று விதிக்கப்படும்போது, அந்த நபர் செய்த ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக மரண தண்டனை வழங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை மேல்முறையீட்டில் ஒரு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், மற்றொன்று செல்லுபடியாகும் வகையில் இது அமையும்.
மேல்முறையீட்டு வாய்ப்புகள்
இந்தியச் சட்டத்தின்படி, ஒரு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தால், அது தானாகவே உயர் நீதிமன்றத்திற்கு உறுதிப்படுத்துவதற்காக செல்லும். தண்டனை பெற்றவர் பின்வரும் நிலைகளில் மேல்முறையீடு செய்யலாம்.
- உயர் நீதிமன்றம்: தண்டனையை உறுதி செய்யவோ, குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதிகாரம் உண்டு.
- உச்ச நீதிமன்றம்: உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இங்கே மேல்முறையீடு செய்யலாம்.
- கருணை மனு (Mercy Petition): அனைத்து சட்டப் போராட்டங்களும் முடிந்த பிறகு, நாட்டின் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்ய முடியும்.
”அரிதினும் அரிதான” வழக்கு
இந்தியாவில் மரண தண்டனை என்பது மிகவும் அரிதாகவே வழங்கப்படுகிறது. சமூக மனசாட்சியை உலுக்கும் வகையிலான மிகக் கொடூரமான குற்றங்களுக்கு மட்டுமே நீதிமன்றங்கள் இந்தத் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.






