நெல்லை அருகே பைக்குகள் திருட்டு வழக்கில் கைதான வாலிபர், காவல் நிலைய கழிப்பறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம், முக்கூடல் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், நெல்லை மாவட்டம், சுத்தமல்லி அடுத்த கொண்டாநகரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு மனைவியை பார்க்க சம்பவத்தன்று பைக்கில் புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் அவர் மாமனார் வீட்டின் முன்பாக நிறுத்திச் சென்ற பைக்கை நோட்டமிட்டு அங்கு வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ரஞ்சித் இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் கொடுத்தார்.
இதேபோல் மகாராஜன் (56) உள்ளிட்ட மேலும் 5 பேர் தங்களது பைக்குகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்். அவற்றின் பேரில் வழக்குகள் பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், பைக்குகளை திருடிச்செல்லும் மர்மநபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே சம்பவத்தன்று மேல அம்பை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமாரின் மகன் ராசுக்குட்டி என்ற இசக்கிராஜா (20), மானூர் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் மகேஷ் (19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த செல்வகுமாரின் மகன் அருணாசலம் (19), ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் வளவிராஜா (18) ஆகிய 4 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் 4 பேரும் பைக் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அத்துடன் இவர்கள் வீடுகளுக்கு வெளியே நிற்கும் வாகனங்களை நோட்டமிட்டு திருடுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்பதோடு திருடும் பழைய வாகனங்களை இரும்புக்கடையில் குறைந்த விலைக்கு விற்று பணமாக்குவதும், நல்ல நிலையில் உள்ள வாகனங்களை தாங்களே ஓட்டி உலா வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
தொடர் விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்ட முக்கூடல் அரசன்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் செல்வ பாபு என்பவரையும் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மொத்தம் 6 பைக்குகளை மீட்டனர்.
இவர்களில் கடைசியாக பிடிபட்ட செல்வ பாபு மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்த நிலையில் அவரிடம் போலீசார் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக வழுக்கி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

More Stories
மலைப்பகுதியில் வாலிபர் அடித்து கொலை…
ஊராட்சி பள்ளியில் புகுந்து கணினி, ஹார்டிஸ்க் திருட்டு…
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்: தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு…