மேல்மலையனூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர், வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வளத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (50).
மேல்ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனது தாய் ராஜம்மாளுடன் இளங்கோவன் தனியாக வசித்து வந்தார்.ஆசிரியர் பணியை மட்டுமின்றி, பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பதையும், வட்டிக்கு பணம் தரும் தொழிலையும் செய்து வந்தாராம். இதனிடையே ராஜம்மாள் கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்
இளங்கோவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக இளங்கோவனின் தாயும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அவரது அக்காவும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளனர். ஆனால் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் ஏற்படவே, அவரது அக்கா மகன் கணபதியை இளங்கோவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டின் ஒருபக்க கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சியடையந்த அவர் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த உறவினர்கள் பின்பக்கம் திறந்து கிடந்த கதவு வழியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் இருந்த ஷோபாவில் உடல் உருமாறி அழுகிய நிலையில் இளங்கோவன் சடலமாக கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர். அப்போது இளங்கோவின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நெகனூர் ஏரிக்கரையோரம் இளங்கோவன் பைக்கில் வந்தபோது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிய நிலையில், காயங்களுடன் தப்பிய அவர் போலீசில் முறையிட்டிருப்பதும் தெரியவந்தது.
இளங்கோவன் வீட்டிற்குள் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்த நிலையில் அவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் யாராவது அடித்துக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இளங்கோவனின் அழுகிய உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு கிடந்ததால் குற்றவாளிகள் தடயங்களை மறைக்க முயற்சி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதன்பேரில் அப்பகுதியில் தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது. முதல்கட்ட விசாரணையில், கடந்த 31ம்தேதி மதியம் வரை இளங்கோவனை செஞ்சி பகுதியில் சிலர் பார்த்ததாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அதன்பிறகே துணிகர சம்பவம் நடந்திருக்கலாம் என்பதால் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்

More Stories
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்
சட்டவிரோதமாக மது விற்ற தவெக பிரமுகர் கைது;
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!