மதுரை அருகே, தொழிற்சாலை மாசு காரணமாக மக்கள் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுவதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், நத்தம் சாலையில் அமைந்துள்ள மந்திகுளம் கிராமத்தில் உள்ள அந்த தொழிற்சாலையின் மாசு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அறிந்து, அந்த பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு இன்று மனு அளித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பின்னர், அந்த ஆய்வுக் குழுவின் பொறுப்பாளர் பேராசிரியர் போ.ராஜமாணிக்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, “மதுரை மாவட்டம், மந்திகுளம் ஊராட்சியில், அக்ரிகல்சுரல் லேபோரட்டரி என்ற தனியார் தொழிற்சாலை கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது மண் ஆய்வு, உரம், தாவர நோய் ஆகியவற்றிற்கான ஆராய்ச்சி நிலையமாகவும் செயல்படுவதாக இணைய தளம் மூலம் அறிகிறோம்.
இந்த தொழிற்சாலை வெளியிடும் கழிவுகள், சுற்றுச் சூழலுக்கும் மனித நலனுக்கும் கேடு விளைவிப்பதாக உள்ளன. இதுகுறித்து கடந்த 23-12-2022 அன்று, மந்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளரிடம் மனு அளித்துள்ளார். பின்னர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு மேலும் ஒரு மனுவை 02-10-2023 அன்று அனுப்பியுள்ளார்.
எந்த தரப்பில் இருந்தும் மனுதாரருக்கு இதுவரை பதிலும் தரப்படவில்லை. எனவே இப்பிரச்சினையை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு மனுதாரர் கொண்டு வந்தபோது, மந்திக்குளம், ஆதி திராவிடர் காலனி, உசிலம்பட்டி, தனியார் குடியிருப்பு வளாகம் ஆகிய நான்கு இடங்களில் நான்கு குழுக்களாக ஆய்வு நடத்தினோம்.
ஆய்வின்போது, அந்த தனியார் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பும் உடல் நலனில் பாதிப்புகளும் எற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காற்று மாசு, துர்நாற்றம், புகை வெளியேற்றம் போன்ற பிரச்சினைகள் நிலவுவதாகவும், நீர் மற்றும் மண் மாசு காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் மற்றும் மீன்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறு, இருமல், ஆஸ்துமா போன்ற உடல்நல பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சிலர் காய்ச்சல், உடல் வலி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
எனவே, பொதுமக்களின் உடல்நலன் பாதுகாப்பையும், சுற்றுச்சூழல் சமநிலையையும் கருத்தில் கொண்டு, மந்திகுளம் பகுதியில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்துகிறோம்.
அந்த தனியார் தொழிற்சாலை வெளியேற்றும் மாசு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். அந்த ஆய்வின்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மனுதாரர் உள்ளிட்ட பிரதிநித்துவம் கொண்ட ஒருவரும் குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும்
மேலும் அந்த தொழிற்சாலையின் உரிமம் 31-03-2026 அன்றுடன் முடிவடைந்த நிலையில், உரிமம் புதுப்பிக்கப்பட்டதா என மாவட்ட ஆட்சியர் சோதனை நடத்த வேண்டும். உரம் தயாரிப்பு, மொத்த விற்பனை, பூச்சிக் கொல்லி உரிமம், மண் பரிசோதனை உரிமம் ஆகியவற்றை இந்த தொழிற்சாலை பெற்றுள்ளதாக என்றும் சோதனை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் முனைவர் ஆண்டனி பால், பொருளாளர் வெண்ணிலா, பேராசிரியர் எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
பெண் விவகாரத்தால் கார் டிரைவர் கொலை?
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்!
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர் கைது…