மே 20-ம் தேதி எந்த மருந்தும் கிடைக்காது…

சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற மே 20-ம் தேதி புதுச்சேரியில் மருந்துக் கடைகள் இயங்காது என புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். மருந்து வணிகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் வருகிற மே 20-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் புதுச்சேரி மாநில மருந்து வணிகர்கள் சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். இதனால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள சில்லரை மருந்துக் கடைகள் மற்றும் மருந்து நிலையங்கள் அன்றைய தினம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மொத்த மருந்து விற்பனை வழக்கம்போல் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது