திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட்…

திருவாரூர் அருகே குட்கா விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெற்றதாக 2 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குடவாசல் தனிப்படை தலைமை காவலர் மனோகரன், நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அத்திக்கடை பகுதியை சேர்ந்த பாஸ்கர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். பாஸ்கர் மீது குட்கா விற்பனை செய்து வருவதாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் யாரிடம் குட்கா வாங்குகிறார் யாருக்கெல்லாம் பணம் அனுப்புகிறார் என்பதை ஆய்வு செய்ய நன்னிலம் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையில் காவல் துறையினர் பாஸ்கரின் செல்போனை ஆய்வு செய்தனர்.

இதில் குடவாசல் தனிப்படை தலைமை காவலர் மனோகரன், நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா ஆகியோருக்கு கடந்த 2 வருடங்களாக பலமுறை 2000, 3000 என பணம் அனுப்பியுள்ளது தெரிவந்தது. இது சம்மந்தமாக டிஎஸ்பி முத்துக்குமரன் நேரடியாக திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சதிஷ்குமாருக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளார். இதே போன்று உணவு பாதுகாப்பு துறையில் அலுவலர் ஒருவருக்கு அடிக்கடி ஜிபே மூலமாக பணம் அனுப்பியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தலைமை காவலர்கள் மனோகரன் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி லஞ்சம் பெற்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மீதும் துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு டிஎஸ்பி சதீஸ்குமார் பரிந்துரை செய்துள்ளார்.