கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கார்த்தி என்ற இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர். இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை தொண்டா முத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் காதலித்து வந்ததாகவும் தெரிகிறது….
இந்த நிலையில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டார்….
அவரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இளம்பெண் தன்னிடம் பேசாததை கார்த்திக்கால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் தொடர்ந்து இளம்பெண்ணை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்தார். மாணவி அதனை ஏற்க மறுத்து விட்டார். இதனால் வாலிபருக்கு இளம்பெண் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார். சைக்கிளில் மாணவியின் வீட்டிற்கு வந்தார். வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்ணின் தந்தையைதகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்….
மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை நிரப்பப்பட்ட பாட்டில்களை (பெட்ரோல்குண்டு) இளம்பெண் வீட்டின் மீது வீசினர். இதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் கார்த்திக் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
டாஸ்மாக் கடைகளில் 54 புதிய பிராண்ட் மது வகைகளை விரைவில் அறிமுகப்படுத்த முடிவு
மரணத்திலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த 3 மணி நேரத்தில் கணவர் உயிர் பிரிந்தது!
நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!