ஆளே இல்ல… ஆனால் அட்டணன்ஸ் போட்டாச்சு! வசமாக சிக்கிய சத்துணவு அதிகாரி …!

ஹவுசிங் போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அங்கன்வாடி மையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குழந்தைகளின் வருகைப்பதிவில் முரண்பாடு, போதிய இடவசதி இல்லாத சூழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தகவலின்படி, மிகக் குறுகிய இடத்தில் இயங்கி வந்த அந்த மையத்தில், சமையல் செய்யும் பகுதியிலேயே குழந்தைகள் அமர வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நேரில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் இருந்தபோதும், வருகைப்பதிவேட்டில் 25 குழந்தைகள் வந்திருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர், பதிவேட்டை ஆய்வு செய்து, குறைந்த குழந்தைகள் மட்டுமே இருந்த நிலையில் அதிக எண்ணிக்கையில் வருகை பதிவு செய்யப்பட்டதற்கான விளக்கத்தை கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகியுள்ளது.

செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பெண் அதிகாரி, குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்காமல் அலட்சியமான அணுகுமுறையுடன் பேசியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், செய்தியாளர் மீது காவல்துறையில் புகார் அளிப்பதாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த உரையாடலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகைப்பதிவு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.