April 22, 2026

மதுரை உசிலம்பட்டியில் அண்ணன், அண்ணி கொடூர கொலை.. ஆத்திரத்தில் தம்பி செய்த பகீர் செயல்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர்கள் பழனி – ஈஸ்வரி தம்பதி. கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து ஆந்திராவில் வீடு எடுத்து தங்கி, முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பாகவே ஆந்திராவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர். இதையறிந்த பழனியின் தம்பி சுப்பிரமணி, மது போதையில் கையில் அரிவாளுடன் அண்ணன் வீட்டிற்கு வந்து சொத்தை பிரிப்பது குறித்து அவர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அவரது அண்ணி ஈஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து விட்டார். மேலும் அங்கிருந்து கிராமத்தின் மந்தைக்கு வந்த சுப்பிரமணி, அங்கு அமர்ந்திருந்த அவரது அண்ணன் பழனியையும் வெட்டி படுகொலை செய்தார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணி, தனது கால் மற்றும் தலை பகுதியில் தனக்கு தானே வெட்டிக் கொண்டு அவரும் அந்த பகுதியிலேயே சுருண்டு விழுந்து விட்டார். 

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன் – மனைவி இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீரிப்பட்டி பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.