April 23, 2026

திருப்பரங்குன்றம் அதிர்ச்சி! என் ஓட்டை யாரு போட்டது? தேர்தல் அதிகாரிகளை அலறவிட்ட இளம்பெண்! 

திருப்பரங்குன்றம்: “ஜனநாயகக் கடமையை ஆற்ற வந்தா.. என் ஓட்டை திருடிட்டாங்க!” என இளம்பெண் ஒருவர் வாக்குச்சாவடியில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய சம்பவம் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

நடந்தது என்ன?

​திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட எம்.ஆர்.சி.எஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு இன்று ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார் திவ்யா என்ற இளம்பெண். ஆனால், உள்ளே சென்றவருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி!

​அவரது அடையாள அட்டையை வாங்கிய அதிகாரிகள், “உங்க ஓட்டு தான் ஏற்கனவே விழுந்துடுச்சே!” என கூலாகச் சொல்ல, திவ்யா அதிர்ச்சியில் உறைந்து போனார்.

போலி கையெழுத்து.. மெத்தனமான அதிகாரிகள்?

​தனது ஓட்டைப் போட்டது யார் என திவ்யா ஆவேசமாக விசாரிக்க, ஆர். திவ்யலட்சுமி என்ற பெயரில் மற்றொரு பெண், திவ்யாவின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி, போலி கையெழுத்திட்டு வாக்களித்தது அம்பலமானது. “அடையாள அட்டையைச் சரிபார்க்க வேண்டிய அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?” என அங்கேயே தர்மசங்கடமான கேள்விகளை எழுப்பினார் திவ்யா.

ஒரு மணி நேரப் போராட்டம் – இறுதியில் கிடைத்த நீதி!

​சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லாததால், தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மண்டல அதிகாரிகளுக்கு அதிரடியாகப் புகார் அளித்தார் திவ்யா. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தியதை அடுத்து, அவருக்கு ‘சவாலுக்குரிய வாக்கு’ (Tendered Vote) அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

விடமாட்டேன்!- திவ்யாவின் ஆவேசப் பேட்டி:

​வாக்களித்துவிட்டு வெளியே வந்த திவ்யா பேசுகையில்:

​”என்னுடைய அடையாள அட்டையைச் சரியாகச் சரிபார்க்காமல் இன்னொருவரை எப்படி அனுமதித்தார்கள்? இது அதிகாரிகளின் மிகப்பெரிய மெத்தனப்போக்கு. என் பெயரில் ஓட்டு போட்ட அந்த நபர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டையைச் சரிபார்ப்பதில் நடக்கும் இத்தகைய குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.