தூத்துக்குடியில் சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பிருந்தாதேவி(32). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால், பிருந்தாதேவி தனது குழந்தைகளுடன் சங்கரப்பேரியில் வசித்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு காலையில் வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிருந்தா தேவி மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெண்ணின் தந்தை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் இளம்பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெண்ணின் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று பிருந்தாதேவி தனது பக்கத்து வீட்டில் உள்ள மாரிமுத்து என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.
அதன்பிறகு அந்த வீட்டில் இருந்து நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மாரிமுத்துவின் மனைவி சரவணப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சரவணப்பிரியாவின் கணவர் மாரிமுத்து கட்டட காண்டிராக்டர் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிருந்தாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியாக வீட்டில் இருந்த மாரிமுத்து, பிருந்தாதேவியை அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரும் மாரிமுத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வெளியே சென்றிருந்த மாரிமுத்துவின் மனைவி சரவணப்பிரியா திடீரென திரும்பி வந்துள்ளார். அங்கு பிருந்தாதேவியை கண்டதும் ஆத்திரமடைந்த சரவணப்பிரியா கடும் வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து தனது கணவரை அருகில் இருந்த அறைக்குள் தள்ளி கதவை பூட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர், பிருந்தாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த பிருந்தாதேவியின் முகத்தில் தலையணையால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிருந்தாதேவி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. பிருந்தாதேவி உயிரிழந்ததை தனது கணவர் மாரிமுத்துவிடம் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு மாரிமுத்து அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளார்.
பின்னர், கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து பிருந்தாதேவியின் உடலை மறைக்க முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து ஒரு சாக்குமூட்டையில் உடலை கட்டியுள்ளனர். தொடர்ந்து மாரிமுத்து தனது மச்சினன் கார்த்திக் என்பவருடன் காரில் உடலை ஏற்றிக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அவர்கள் ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டு உடலை புதைத்துள்ளனர். இதை அறிந்த போலீசார் புதைக்கப்பட்ட பிருந்தாதேவியின் உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

More Stories
திருப்பூர் அருகே சாலை விபத்து: காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
வேறு ஒருவரின் வீட்டை குத்தகைக்கு விட்ட ஐ.டி பெண் ஊழியர் கைது…
தொடங்கப்பட்டது முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம்…