October 28, 2026

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி மொழி அச்சிடப்பட்ட விவகாரம்: சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சை!

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு மாத்திரை உட்கொள்ளும் முறைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் குறிப்புகள் அச்சிடப்பட்டு மருந்து சீட்டுகள் மற்றும் கவர்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இது கடந்த தி.மு.க. ஆட்சி காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழி கொள்கை மறைமுகமாக அமலுக்கு வந்துவிட்டதா என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்ததை அடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம், பழைய இந்தி வாசகங்கள் இடம்பெற்ற கவர்களில் இனி மாத்திரைகள் வழங்க வேண்டாமென மருந்தாளுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் குறிப்புகள் இடம்பெறும் வகையிலான புதிய கவர்கள் மூலம் மாத்திரைகள் வழங்கப்படும் என மருத்துவமனை மருத்துவ அலுவலர் சரவணபிரியா தெரிவித்துள்ளார்.