வாயுக் கசிவு விபத்து| ’23 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..’ 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 70-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். பலரது மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டிய நிலையில், மயக்கம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள 2 தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, முதல்வர் விஜய் 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்தபிறகு பேசிய அமைச்சர் குமார், கண்கலங்கிய படி பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குமார், திருவள்ளூரில் அம்மோனியா வாயுக் கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது. அம்மோனியா வாயுக்கசிவில் பாதிக்கப்பட்ட அனைவரும் வடநாட்டவர்கள். இதில் 60 பேர் பெண்கள், 4 பேர் ஆண்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

முதலமைச்சர் மிகவும் வேதனைப்பட்டார், இனிமேல் இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது என அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறார். இங்கிருக்கும் மருத்துவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். உயர்மட்ட மருத்துவர்கள் போராடித்தான் இத்தனைப் பேரைக் காப்பாற்றி இருக்கிறார்கள். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் முதலமைச்சரிடம் தெரிவித்து வருகிறோம் என்று கூறினார்.