மதுரையில் வறுமையால் சாலையில் பெண் தீக்குளிப்பு: 90% காயங்களுடன் தீவிர சிகிச்சை;

மதுரை மதிச்சியம் அருகே உள்ள ராமராயர் மண்டபம் பகுதி எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் முக்கிய சாலையாகும். இன்று இப்பகுதியில் சாலையின் நடுவே திடீரென பெண் ஒருவர் உடல் எறிந்த நிலையில் அலறியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதிச்சியம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தீக்குளித்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த வள்ளி (45) என்பது தெரியவந்தது. அவர் தினந்தோறும் பிற வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து, அன்றாட வாழ்க்கையை மிக சிரமத்துடன் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடும் வறுமையின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், யாரேனும் அவர் மீது தீ வைத்தனரா அல்லது அவராகவே தீக்குளித்தாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையின் நடுவே தீக்குளித்த வள்ளியின் உடல் 90% படுகாயமடைந்தது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையின் நடுவே பெண் ஒருவர் தீக்குளித்த இந்தச் சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சோகத்தையும், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.