சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பரவலாக முறைகேடுகள் நடப்பதாக வந்த தொடர் புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
நேற்று நடைபெற்ற இந்த அதிரடி சோதனையின் போது, கணக்கில் வராத மொத்தம் ரூ.57 லட்சத்து 98 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.31,27,110-மும், சந்தேகத்திற்கு இடமான வகையில் கூகுள் பே (Google Pay) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.26,70,990-மும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் அதிகபட்ச பறிமுதல்: மாநில அளவில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் ரூ.7,49,900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய மண்டலங்களில் சோதனை: சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டல அலுவலகங்களிலும் இந்த சோதனை நீடித்தது. குறிப்பாக:
- கோடம்பாக்கம் (மண்டலம் 10) – ரூ.1.30 லட்சம்
- தேனாம்பேட்டை (மண்டலம் 9) – ரூ.1,39,800
- ராயபுராம் (மண்டலம் 5) – ரூ.64,500
- திருவேற்காடு, அண்ணாநகர், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளிலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக முக்கிய பறிமுதல் விபரங்கள்: சென்னைக்கு வெளியேயும் லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடி இறுகியது. அதன்படி முக்கிய இடங்களில் சிக்கிய விபரங்கள்:
- ராமநாதபுரம் நகராட்சி – ரூ.3.66 லட்சம்
- காரைக்குடி மாநகராட்சி – ரொக்கம் மற்றும் கூகுள் பே மூலம் மொத்தம் ரூ.8.38 லட்சம்
- போடிநாயக்கனூர் நகராட்சி – ரொக்கம் மற்றும் கூகுள் பே மூலம் ரூ.1.94 லட்சம்
- ஓசூர் மாநகராட்சி (வருவாய் பிரிவு) – ரூ.1.13 லட்சம்
- ஈரோடு மாநகராட்சி – ரூ.1.10 லட்சம்
- திருப்பத்தூர் நகராட்சி – ரூ.5.79 லட்சம்
- கள்ளக்குறிச்சி நகராட்சி – ரூ.1.67 லட்சம்
இது தவிர தாம்பரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, திருத்தணி, விழுப்புரம், கோட்டக்குப்பம், கோவை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் சிக்கியுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில், ஒரே நேரத்தில் 41 இடங்களில் நடத்தப்பட்ட இந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை, அரசுத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
கோவையில் நடுரோட்டில் மாணவி பலாத்கார முயற்சி 20 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை…
புதுச்சேரி: சிறுவர்களின் பெற்றோர் மீது FIR… போக்குவரத்து போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை…
மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பஸ்சில் பாலியல் தொல்லை: ஆம்னி பேருந்து ஓட்டுநர் கைது…